பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழங்களில் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படுவதால், எமது கல்வித்தரம் சர்வதேச தரப்படுத்தலுக்கு மேம்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி, யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றபோது, அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர், மாலைதீவு ஜனாதிபதி அண்மையில் இலங்கை வந்திருந்தபோது, ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பில் நான் முன்வைத்த கோரிக்கையொன்றை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழங்களில் கிளைகளை மாலைதீவில் அமைக்கும் எனது யோசனைக்கு அவர் இணக்கம் தெரிவுத்துள்ளார்.

இந்த திட்டத்துக்கு மாலைதீவில் தனியொரு தீவை ஒதுக்கித்தருவதாக அவர் வாக்குறுதியளித்துள்ளார். அங்குள்ள மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக கல்வியின் முதல் இரண்டு வருடங்களை மாலைதீவு கிளையிலும், இறுதி இரண்டு ஆண்டுகளை இங்குள்ள பல்கலைக்கழங்களிலும் கற்பார்கள். இதன்மூலம் எமது கல்வித்தரம் சர்வதேச அளவிலான தரப்படுத்தலுக்கு மேம்படுத்தப்படும். உயர்கல்வி அமைச்சை பொறுப்பேற்றுள்ள நிலையில் அதில் பல மாற்றங்களை செய்வதற்கு தீர்மானித்துள்ளேன்.

இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப கல்விக்கு அதிக முக்கியத்துவமளித்து புதிய கற்கைநெறிகளை அறிமுகப்படுத்தவுள்ளோம். இதற்காக பல்கலைக்கழங்களில் தொழில்நுட்ப வளாகங்களை உருவாக்கி வருகிறோம். உயர்தரத்தில் கற்கைநெறிகளை தெரிவுசெய்தல் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு போதிய தெளிவின்மையால், பல்கலைக்கழகம் சென்று தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தொழில்வாய்ப்பை அடிப்படையாக வைத்தே பாடநெறிகளை தெரிவுசெய்ய வேண்டும்.

இனிவரும் காலங்களில், சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர், அந்தந்த வலயக் கல்வி நிலையங்கள் ஊடாக மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டி பயிற்சிகளை வழங்குமாறு மகாபொல நிதியத்துக்கு பணிப்புரை விடுக்கவுள்ளேன். இதன்மூலம் மாணவர்கள் சரியான பாடநெறிகளை தெரிவுசெய்வதை இலகுபடுத்த முடியும். தொழில்வாய்ப்புக்கு பொருந்தாத பாடங்களை பல்கலைக்கழங்களில் குறைக்க தீர்மானித்து வருகிறோம். கலைப்பிரிவில் புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தாது அதனை மட்டுப்படுத்தவுள்ளோம்.

தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு இலகுவான பாடநெறிகளையே புதிதாக அறிமுகப்படுத்தவுள்ளோம். இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். முன்னணி பல்கலைக்கழங்களை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த புதியதொரு சட்டமூலத்தை உருவாக்கவுள்ளேன். இதற்கென பிரத்தியேகமாக ஒரு ஆணைக்குழுவை அமைக்க தீர்மானித்துள்ளேன். இதற்கான முன்மொழிவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன் என்றார்.