முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதம நீதியரசரினால் வழங்கப்பட்ட கட்டளையின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் தலைவர் சம்பத் அபேகோன் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த வழக்கை விசாரிக்க தங்களுக்கு இருக்கும் அதிகாரம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை குறிப்பிட முடியாது என கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனடிப்படையில் குறித்த ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் வழங்கின் 6 ஆவது பிரதிவாதியான மஹிந்த சாலிய என்பவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதனால் நீதிமன்றத்திற்கு ஆஜராக முடியயவில்லை என அவரின் சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார்.

இதனால் குறித்த வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை என்பதுடன் சிறிது நேரம் கழித்தே அவர் ஆஜாராகியதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதையில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக உரிய நேரத்திற்கு ஆஜராக முடியவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

பிரதிவாதிகள் உரிய நேரத்திற்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு எச்சரிக்கை ஒன்றை விடுக்குமாறு அரசாங்கத்தின் பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழு அனைத்து பிரதிவாதிகளும் உரிய நேரத்திற்கு ஆஜராகுமாறு எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடந்த அரசாங்க காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.