உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத தானம் கொடுத்தல் நடவடிக்கைகள், நமது நாட்டிலேயே முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உணவு, உடைகள், பணம் ஆகியனவற்றைத் தானம் கொடுத்தவன், இளைஞனாக இருக்கும்போதே இரத்தத்தைத் தானம் கொடுத்தவன், அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அந்த அதிகாரங்களையும் தானம் கொடுத்தவன் தானே என்றார். உலகில் எந்தவொரு தலைவனும் செய்யாத அதிகாரத்தைத் தானம் கொடுத்துத்தான், இந்த அரசாங்கத்தைத் தான் காப்பாற்றியதாகவும் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19ஆவது குழந்தை பிறக்கும் போதே, அங்கவீனமான குழந்தையென ஊடகத்தில் கூறப்பட்டதை, தான் 99 சதவீதம் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.
நாடாளுமன்றத்தில், நேற்று (21) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட அரசமைப்புப் பேரவை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்த ஆளும், எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் உரைக்கு பதிலளிக்க, தான் இங்கு வரவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, தனது நிலைமைப்பாடு தொடர்பில் பிழையாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
பிரதமர், அரச, எதிர்க்கட்சித் உறுப்பினர்களின் கருத்துகளின் பிரகாரம் பார்க்கும் போதும், உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களை, தான் விமர்சனம் செய்வதாகக் கூறி, பிழையான அர்த்தத்தைக் கற்பிக்கின்றனர் என்றார்.
மூத்த உறுப்பினர்களை நீதிபதிகளாக, நீதியரசர்களாக நியமிக்கப்படுவதற்கு, தான் எவ்விதமான ஆட்சேபனைகளையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறிய ஜனாதிபதி, இந்த சபையின் உறுப்பினர் தானல்ல என்றும் எனினும், அரசமைப்பில் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே, தான் சபைக்கு வந்துள்ளதாகவும், அதனடிப்படியிலேயே தான் உரையாற்றுவதாகவும் தெரிவித்தார்.
தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்ட அரசாங்கத்துக்கு, சபையிலிருக்கும் சகல கட்சிகளும் ஒத்துழைப்பு நல்கி, இணக்கம் தெரிவித்தமையால் தான், அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதெனக் கூறிய ஜனாதிபதி, எங்களுடைய நாட்டில் தான், சகல சமயங்களையும் சேர்ந்தவர்கள் தானம் கொடுப்பார்கள் என்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, புலிகளின் யுத்த தாங்கிகளின் மீது பாய்ந்து, தங்களுடைய உயிர்களையே, வீரமிக்க பாதுகாப்புப் படையினர் தானம் கொடுத்தனர் என்றும் கூறினார்.
‘நானும் தானம் கொடுத்தேன். இளைஞனாக இருக்கும் போது, இரத்தத்தையும் தானம் கொடுத்துள்ளேன்’ என்றும் தெரிவித்த ஜனாதிபதி, அதிகாரத்தைத் தானம் கொடுப்பதென்பது, உலகத்தில் மிகக் குறைவென்றும் எனினும், இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக, தனது அதிகாரத்தையும் தானம் கொடுத்தாகக் கூறினார்.
அரசமைப்புப் பேரவை, முற்றாகச் சீரழிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளதெனத் தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் குற்றவாளிகளின் மனித உரிமை மீறல்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளையே, மனித உரிமை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன என்றும் மனித உரிமை மீறல்கள் என்பவை, இலங்கைக்கு மட்டுமா என்றும் கேள்வி எழுப்பியதோடு, உலகில் பல நாடுகளிலும், மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அமெரிக்க சிறைச்சாலைகளிலும் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று சுட்டிக்காட்டினார்.
மிக நீண்ட உரையொன்றை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, அமைச்சராகவிருந்த கரு ஜயசூரிய ஆற்றிய உரையையும் தன்னுடைய உரையில் மேற்கோள் காட்டினார்.