அரசியலமைப்பு பேரவையில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் பிரதிநிதிகள், மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் ஆகியோரே தற்போதுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
இவர்களைத் தவிர, சமல் ராஜபக்ஸ இருந்ததாகவும் அவரும் இராஜினாமா செய்துவிட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.தற்போது யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், குழுவில் அரசியல்வாதிகளே அதிகமாகவுள்ளதாகவும் சிவில் சமூகத்தினர் மூவர் மாத்திரமே உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்‌ஸ சுட்டிக்காட்டினார்.
அவரின் இந்த கருத்து தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் இன்று கருத்து தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரத்தை குறைப்பதனையே அரசியலமைப்பு பேரவையின் ஊடாக எதிர்பார்த்தோம். அரசியலமைப்பு பேரவையிலுள்ளவர்கள் தொடர்பான மாற்றம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைய மாற்றமடைய வேண்டும் எனின், அதனை முன்னெடுக்க வேண்டும் என நான் எண்ணுகின்றேன். அதனை விடுத்து அரசியலமைப்பு பேரவையை இல்லாது செய்யக்கூடாது.
என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிட்டார்.
நல்ல நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டவொரு விடயத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன, சுயாதீனம் இல்லை என எவரேனும் கூறுவார்கள் எனின், சுயாதீனத்தன்மை ஏற்படும் வகையில் அதனைத் தயாரிக்க வேண்டும். அதனை விடுத்து பிரச்சினையொன்றை நீடிக்கக் கூடாது. என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.