காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ளனர்.

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இன்றுகாலை 10 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகள் இடம் பெறும் பகுதியை வந்தடைந்தது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.விசகரன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதி நிதிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உட்பட தென் பகுதியில் இருந்து அருட்சகோதரர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு முன் ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து குறித்த ஊர்வலம் மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. பின்னர் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கின்ற இச் சூழலில் மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டாம், இலங்கை அரசாங்கத்தை நீதிப்பொறிமுறையில் இருந்து தப்ப வைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

மேலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், மன்னார் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் யார், புதைத்தவர்கள் யார், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திரா அவர்களினால் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலம் குரூஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது.