மதவாதக் குழு ஒன்றினால் நேற்று உடைக்கப்பட்ட மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கான வளைவை மீண்டும் தற்காலிகமாக 4 தினங்களுக்கு அமைப்பதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வளைவு நேற்று குழு ஒன்றினால் உடைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மன்னார் காவற்துறை நீதவானிடம் முறையிட்டமைக்கு அமைய, முறைப்பாட்டை விசாரணை செய்த பதில் நீதவான் இ.ஹயஸ் செல்தானோ, குறித்த வளைவை தற்காலிகமாக 4 தினங்களுக்கு அமைக்க அனுமதி வழங்கியுள்ளார். இதேவேளை, மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்காக சீரமைக்கப்பட்ட வளைவு நேற்றையதினம் மதவாதக் குழு ஒன்றினால் உடைக்கப்பட்டமைக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து குருக்கள் சபையின் தலைவர் சீறிவசிறி கே.வி.கே. வைத்தீஸ்வர குருக்கள் இன்றையதினம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் வடக்கில் இந்துக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் மற்றும் மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு குழு ஒன்றை அமைத்து தீர்வு காண முடியும் என்று வடமாகாண ஆளுநர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார். இதேவேளை இந்த சம்பவத்தை இந்து சமயப் பேரவையும் கடுமையாக கண்டித்துள்ளது. பாடல்பெற்றத் திருத்தளமான மன்னார் கேதீஸ்வரத்துக்கான இந்த வளைவு சட்டவிரோதமாக அமைக்கப்படவில்லை. எனவே இதனை அகற்றி இருப்பது தீவிர மதவாத செயற்பாடு என்று அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.