மன்னார் திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. மாந்தை சந்தியில் பலவருட காலமாக தற்காலிக அலங்கார பலகையொன்று காணப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சிவராத்திரியை முன்னிட்டு, அந்த அலங்கார பலகையை தாம் புதுப்பிக்கச் சென்ற வேளையில், கிறிஸ்தவ பாதிரியார்களின் தலைமையிலான சில குழுவினர் வருகை தந்து அதற்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்கார பலகையையும் அந்தக் குழுவினர் உடைத்தெறிந்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். திருகேதீஸ்வரம் ஆலயத்தின் நிரந்தர அலங்கார பலகையை அந்த இடத்தில் ஸ்தாபிப்பதற்கான அனுமதி தம்வசம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஆலய நிர்வாகத்தினர், அதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் ஆவணங்களும் தம்மிடம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையிலேயே, குறித்த குழு, இந்த அலங்கார பலகையை உடைத்தெறிந்துள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் திருக்கேதீஸ்வர ஆலய யாத்திரியர்களால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்ட போதும், எவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும் காவற்துறையினருக்கு அழைப்பு விடுத்த போதும் அவர்கள் சம்பவம் நிறைவடைந்த பின்பே குறித்த இடத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.