கிளிநொச்சி – உதயநகர் கிழக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்றுகாலை 7.45மணியளவில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு காப்புறுதி நிறுவன கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா – வேப்பங்குளத்தைச் சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தையென தெரியவருகிறது. இவர் தனது அலுவலக பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் இருந்து புறப்படும்போது உந்துருளியில் வந்த ஒருவர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதன்போது தலை, கை, கால் உடம்பு என பல இடங்களில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்தகராறு காரணமாக இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய உறவினரைக் கைதுசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.