யாழ், மட்டுவில் வின்சன் வீதியிலுள்ள வீடு ஒன்றின்மீது இன்று அதிகாலை 12.15 மணியளவில் வாள் மற்றும் கோடாரிகளால் வீடொன்றின்மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்திய குழுவினர் மட்டுவில் சந்தியில் நின்று தொடர்ந்தும் அட்டகாசம் செய்து வந்ததன் காரணத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. சாவகச்சேரிப் பொலிஸார் மற்றும் 119 அவசரப் பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் உரிய நேரத்தில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.சமாதான நீதவான் ஒருவரின் வீட்டின்மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைக் கவசம் இல்லாது இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களாளேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலை மேற்கொண்ட 20 பேர் அடங்கிய குழு தாக்குதலை நடத்திவிட்டு மட்டுவில் சந்தியில் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியிலும் மக்கள் பதற்றமான நிலையில் வெளியே சென்ற பார்க்க முடியாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை முகங்களை மூடிய மூன்று பேர் கொண்ட குழு வீடொன்றில் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் யாழ், சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூவரும் வீட்டுக்கு வெளியே இருந்த முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொருக்கியதுடன், மூதாட்டி ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.