11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற நிலந்த முணசிங்க உள்ளிட்ட ஆறு பேரும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ஓய்வுபெற்ற அத்மிரல் வசந்த கரன்னகொட உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக பண்டார, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் கடற்படை தளபதி ஓய்வுபெற்ற அத்மிரல் கரன்னகொட ஏலவே அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.