துயர் பகிர்வோம்!

தமிழ் தகவல் நடுவம்(TIC) 1984ல் இந்தியாவின் தமிழகத்தில் சென்னை, மதுரை நகரங்களில் தனது காரியாலத்தை அமைத்து செயற்பட ஆரம்பித்த காலந்தொட்டு நண்பர் வை. வரதகுமார் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் எமது அமைப்பின் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனும் நானும் பெற்றிருந்தோம். தொடர்ந்து 1987 முதல் பிரித்தானியாவில் தமிழ் தகவல் நடுவம் செயற்படத் தொடங்கியதிலிருந்து இற்றைவரை இவருடனான எனது நட்பு தொடர்ந்தது.

எளிமையும் ஆழ்ந்த தமிழ் தேசியப்பற்றும் பழகுவதற்கு மிக இனிய சுபாவத்தையும் இயல்பாகவே தன்னகத்தே கொண்டிருந்த அவர் இலங்கையில் தமிழ் இனம் உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமான ஒரு இனமாக வாழவேண்டுமென்பதில் வேணவா கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அதற்காகவே தனது சிந்தனையையும் செயலையும் ஒருமுகப்படுத்தி தன் வாழ்நாழில் பெரும்பகுதியை கழித்தார். சகல தமிழ் விடுதலை அமைப்புக்களுடனும் ஏற்றத்தாழ்வு பாராட்டாது தொடர்பினைப்பேணிய அவர், தமிழகத்தில் தமிழ் தகவல் நடுவத்தினை சகல தமிழ் அமைப்புக்களும் தங்களுக்குள் தொடர்புகளைப் பேணவும் சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவும் ஒரு களமாக பயன்படுத்த வழியமைத்தார். விடுதலை அமைப்புக்கள் ஒற்றுமையாக இலக்கினை நோக்கி பயணிக்கவேண்டுமென்ற அவரது முயற்சி இறுதிமூச்சுவரை தொடர்ந்ததாகவே இருந்தது ஒரு துரதிஸ்டம். விடுதலைப் போராட்டத்தினதும் இலங்கை தமிழர்களினதும் வரலாற்று ஆவணங்களையும்  தகவல்களையும் பேணுவதில் மிகுந்த சிரத்தை காட்டினார். இலங்கை பேரினவாத அரசுகளின் தமிழர் மீதான அடக்குமுறைகளையும் இனவழிப்புகளையும் சான்றுகளோடு ஆவணப்படுத்தினார். மேலும் தமிழ் அகதிகளின் வாழ்வுரிமைக்காகவும் மனித உரிமைகளுக்காவும் தொடர்ந்து இறுதிவரை களமாடினார். 

2009 மே மாதம் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதாக கூறப்பட்ட பின்னர் அனைத்து தமிழ்த் தரப்புகளையும் (தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.பி.டி.பி., பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்,, மலையக கடசிகள், முஸ்லீம் கட்சிகள் உட்பட) ஒற்றுமைப்படுத்த வரதகுமார் அவர்கள் எடுத்த விடாமுயற்சியின் விளைவாக ஒரு கலந்துரையாடல் 19ம் திகதி நவம்பர் மாதம் 2009 ஆண்டு சுவிற்சர்லாந்து நாட்டில் இடம்பெற்றது. இது ஒற்றுமையின்பால் அவர் கொண்டிருந்த பற்றுறுதிக்கும் அவரது தனிப்பட்ட அனைவரையும் அரவணைத்து அனுசரித்துச்செல்லும் பண்பிற்குமான ஒரு சான்றாகும். 

மனித நேயத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் தனது இனத்திற்காகவும் நேர்மையாக, அயராது, தன்னலமற்று செயற்பட்ட ஒரு சிந்தனையாளனை….ஒரு செயற்பாட்டாளனை…. எல்லாவற்றிற்கும் மேலாக மனித விழுமியங்களை மதித்த ஒரு மானுடனை…. நாம் இன்று இழந்து நிற்கின்றோம். 

அன்னாரின் கனவுகள் நனவாக உழைப்பதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். 

த.சித்தார்த்தன்

தலைவர்,

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

15/03/2019.