வவுனியா – ஈச்சங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் அகழ்விற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இருவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பூம்புகார் சுடலைக்கு அருகாமையில் புதையல் தோண்டுவதாக வவுனியா சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் நேற்று முன்தினம் இரவு 11.00மணியளவில் ஐவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட நபர்களின் கையடக்க தொலைபேசியினை சோதனையிட்டதில் ஈச்சங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரியுடன் இவர்களுக்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இவர்கள் புதையல் தோண்ட முற்பட்ட சமயத்தில் ஈச்சங்குளம் காவற்துறை நிலைய பொருப்பதிகாரியும் கான்ஸ்டபிள் ஒருவரும் சம்பவ இடத்திற்கு அருகே காவலில் நின்றமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த காவற்துறை அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.