சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் இன்று தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். அங்கு ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வaந்ததையடுத்து, பெயர் பலகையை சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக சிவனொளிபாதமலை என்றிருந்த பெயர் சிறிபாத என்று மாற்றப்பட்டது. எனினும் மஸ்கெலியா பிரதேச சபை தீர்மானத்துக்கு அமைய மீண்டும் சிவனொளிபாதமலை என எழுதப்பட்டிருந்தது. எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்தமையால் அங்கு மீண்டும் பதற்ற நிலை உருவாகியிருந்தது.

சிவனொளிபாதலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து ஹட்டன் பொலிஸ் மா அதிபர், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் இணைந்து பொது கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். இக்கூட்டத்தில், இவ்வாறு தவறான விடயத்தில் ஈடுபட்டோரை சி.சி.ரி.வி கெமராவின் உதவியுடன் கைது செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.