மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட திருக்கேதீஸ்வரம் நாவற்குளம் பகுதியில்,இராணுவத்தின் வசமிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான காணியில் தற்போது அப்பகுதியில் உள்ள இராணுவத்தினர், இராணுவத்திற்குச் சொந்தமான பல்வேறு கழிவுப்பொருட்களை கொட்டப்பட்டு தீ இட்டு எரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் நாவற்குளத்திற்குச் செல்லும் பிரதான சந்தியில் உள்ள தனியாரின் காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில், குறித்த தனியாரின் காணிகயில் இருந்து இராணுவத்தினர் சில வருடங்களுக்கு முன் முற்றாக வெளியேறியுள்ளனர். எனினும் குறித்த காணி உள்ள இடம் சார்ந்த பகுதிகளில் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வுகளும் இடம் பெற்று வந்துள்ளது. இந்த நிலையில், குறித்த காணியில் அப்பகுதியில் உள்ள இராணுவ முகாம் மற்றும் இராணுவ கவாலரண்களில் உள்ள இராணுவத்திற்குச் சொந்தமான முழு கழிவுப் பொருட்களும் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இராணுவத்தினர் பயண் படுத்திய உடைகள், தொப்பி, குறிப்பேடுகள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொட்டப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.