முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை மற்றும் புத்தர் சிலையை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்துக்கு எதிராகவும் பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு சென்ற மக்களுக்கு எதிராகவும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டு முல்லைத்தீவு பொலிசாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.

அதாவது தொல்பொருள் சின்னங்களை பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு வந்தவர்கள் சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது . இதில் பிள்ளையார் ஆலய நிர்வாகம் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் மற்றும் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் உள்ளிட்டவர்கள் மன்றில் ஆஜராகி வாதாடியிருந்தர்கள்.

ஏற்கனவே பிள்ளயார் ஆலயத்தின் பெயர் மாற்றப்பட்டு கணதேவி தேவாலயம் என பிக்குவால் பிள்ளையார் ஆலய முகப்பில் பெயர்பலகை மாற்றப்பட்டிருந்த வேளை ஆலய நிர்வாகத்தினரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும் பொலிஸார் அதற்க்கான விசாரணைகள் எதனையும் மேற்கொள்ளாது பௌத்த பிக்குவுக்கு மட்டும் சார்பாக செயற்பட்டுவருவதாகவும் தற்போது இந்த புதிய வழக்கை பிக்குவுக்கு சார்பாக முன்வைத்துள்ளதாகவும் மன்றின் கவனத்துக்கு கொண்டுசென்றனர்.

அத்தோடு கடந்த பலவருடமாக தொல்பொருள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த பிள்ளையார் ஆலய பகுதியை ஆக்கிரமித்து அங்கே அகழ்வு வேலைகளை செய்து விகாரை அமைத்துள்ள பிக்குவால் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் ஏற்படவில்லையா ? எனவும் மன்றின் முன் தமது வாதங்களை முன்வைத்தனர். இன்றையதினம் தொல்பொருள் திணைக்களம் சார்பில் அதிகாரிகள் பலரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். இரண்டு தரப்பின் விவாதங்களையும் செவிமடுத்த நீதவான் வழக்கை எதிர்வரும் 28.ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.