தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

நாட்டின் பல பகுதிகளின் இன்னும் வறட்சியான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, வடமேல், வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், ஊவா உள்ளிட்ட பல மாகாணங்கள் இந்த வறட்சியான வானிலையை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக, அதிக வெப்பமுடைய காலநிலை எதிர்வரும் ஏப்ரல் முடியம் வரை நிலவுகின்ற சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவிக்கின்றார்.

அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையை அடுத்து, நீர்மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் நீர்மின் உற்பத்தி 90 சதவீதம் குறைந்துள்ளதால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.