Header image alt text

இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய தூதுவராக சரா ஹல்டொன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகம் இதனை அறிவித்துள்ளது ஆகஸ்ட் மாதம் புதிய தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பார் என வெளிவிவகார பொதுநலவாய அலுவலகம் அறிவித்துள்ளது.

சரா ஹல்டன் தற்போது வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் மனித வள இயக்குநராக பணியாற்றி வருகின்றார். இதேவேளை தற்போது இலங்கைக்கான தூதுவராக பணியாற்றிவரும் ஜேம்ஸ் டோரிஸ் மற்றொரு இராஜதந்திர சேவைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரதி பிரதானியாக பிரதீப் அமிர்தநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரித்தானியாவில் பட்டய நிறுவமொன்றில் சந்தைப்படுத்தல் பிரிவு, பத்திரிகை, விளம்பரம் மற்றும் நிர்வாகத் துறைகளில் 30 ஆண்டு கால அனுபவமுடையவர்.

அதேவளை ஒரு ஊடகவியலாளராகவும் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் அவர் 2015 ஆம் ஆண்டு முதல் மக்கள் லீசிங் அண்ட் பினான்ஸ் துணை தலைவராக இருந்ததுடன் கொழும்பு மேற்கு றோட்ரிக் கழகத்தின் முன்னாள் தலைவராகவும் அனுர பண்டாரநாயக்க அறக்கட்டளையின் பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர்மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியை சேர்ந்த பொன்னையா பாலரஜித் (வயது37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் 11 இளைஞர்கள் புத்தளம் கலப்பு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் வந்திருந்த வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த உணவு மற்றும் உடைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.