தமிழகம் – திருச்சி சிறப்பு முகாமில் 11 இலங்கை ஏதிலிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற வெளிநாட்டவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, இலங்கைத் தமிழர்களான தயானந்தன், றொபின் பிரசாந்த், சாந்தரூபன், சத்தியசீலன், தயாகரன், கோபிநாத், குருவிந்தன், சுதர்ஷன், பிரபாகரன், ரமேஷ், தர்ஷன் ஆகிய 11பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றுலா சென்றபோது குறித்த இலங்கையர்கள் 11பேரும் காவல்துறையினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், குறித்த வழக்கிலிருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னரும், சிறப்பு முகாம் சிறையில் தொடர்ந்தும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்களை சிறப்பு முகாமிலிருந்து விடுவித்து, இலங்கைக்கு அனுப்பிக்க வேண்டும் எனக்கோரிய 11பேரும் நேற்று முற்பகல் 10.30 அளவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரதேச காவல்துறையினரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அவர்களுடன் பேச்சு நடத்தியபோதும், அவர்கள் உணவுதவிர்ப்பு போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளனர் என இந்திய ஊடகம் கூறுகின்றது.