குடும்பத் தலைவர் ஒருவரை கோடாரியால் கொத்திக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர் தாக்குதலை மேற்கொண்டபோது, அவரது கையிலிருந்த கோடாரியை வாங்கியே எதிரி தாக்குதல் நடத்தியுள்ளமை சாட்சியங்களின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. எதிரி தற்காப்புக்காகவே அதனைச் செய்துள்ளார். அதனால் அவர் கொலை செய்யும் எண்ணத்துடன் இதனைச் செய்யவில்லை என்ற முடிவுக்கு மன்று வருகின்றது. அதனால் எதிரி மீதான கொலைக் குற்றச்சாட்டை கொலை ஆகாத இறப்பை விளைத்தார் என்ற குற்றமாக சாட்சியங்களின் மூலம் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு எதிரி 8 இலட்சம் ரூபா பணத்தை இழப்பீடாக வழங்கவேண்டும்.

அதனைச் செலுத்தத் தவறின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். மேலும் 10 ஆயிரம் ரூபா தண்டமாகச் செலுத்தவேண்டும் அதனைச் செலுத்தத் தவறின் 2 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபில் என். எம். மொகமெட் அப்துல்லாஹ் தீர்ப்பளித்துள்ளார்.