புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட, இலங்கை இராணுவத்தின் அமைதி காக்கும் படைப்பிரிவிற்கு பாகிஸ்தான் அரசாங்கம் 15 கணனிகள் மற்றும் பிரதி எடுக்கும் கருவிகளை வழங்கியுள்ளது. இவை இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய தூதுவர் ஊடாக இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜென்ரல் ஷாஹிட் அகமட் ஹஷ்மற், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் மகேஷ் சேனநாயக்காவிடம் இவற்றை கையளித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய தூதுவர், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் இலங்கை இராணுவம் ஆற்றி வரும் சேவைகளை பாராட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தானிய இராணுவம் கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக ஒரு லட்சத்து 50ஆயிரம் இராணுவத்தினரை சேவையில் ஈடுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, இராணுவ தளபதி கருத்து தெரிவிக்கையில், பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கணனிகள் மூலம், இலங்கை அமைதி காக்கும் படைப்பிரிவின் தகவல் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.