புத்தாண்டு உதயம் முடிவடைந்த பின்னர் உடனடியாக அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு அதிவேக வீதி நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்தாண்டு சுபவேளை நிறைவடைந்தவுடன் உடனடியாக பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிப்பதனால், கடந்த வருட புத்தாண்டு காலப்பகுதியில் அதிகாரிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தார்கள்.

பண்டிகைக் காலப்பகுதியில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இக்காலப் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

வெளியேறும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து இயந்திரக் கோளாறுகளுக்கு உள்ளாகும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக பணிப்பாளர் கூறினார்.

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு பிரவேசிப்பதற்கு முன்னர் வாகனங்களின் நிலையை பரிசோதித்துக் கொள்ளுமாறு அவர் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும், எஞ்சின் கோளாறுகளுக்கு உள்ளாகும் வாகனங்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.