யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பகல் 2.30 மணியளவில் கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே குறித்த நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த இரு பெண்களும், ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த புகையிலை தோட்டத்தில் நால்வர் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருவர் உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனைய மூவரும் வேலைசெய்து கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னை மரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர். இதன்போது மின்னல் குறித்த தென்னை மரத்தின் மீது தாக்கியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 49 வயதுடைய திருநாவுக்கரசு கண்ணன், 55 வயதுடைய கந்தசாமி மைனாவதி மற்றும் 38 வயதுடைய ரவிக்குமார் சுதா என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.