நாட்டின் மின்சார பிரச்சினைக்கு தீர்வை காணும்வகையில் ஐந்து எல்.என்.ஜீ மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த மின்சார தேவையில் 50 சதவீதமான பகுதியை 2030ம் ஆண்டளவில் புதுபிக்கக் கூடிய வலுசக்தி மூலங்களிருந்து பெற்றுக்கொள்ள அமைச்சு எதிர்பார்த்துள்ளது. இதற்கமைய சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி மிதக்கும் மின் உற்பத்தி நிலையம் மாதுருஓய நீர்த்தேக்கத்தில் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் பத்து மெகாவோட்ஸ் மின்சாரம் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது. நாட்டின் மின்சார தேவை வருடாந்தம் 200 மெகாவோட்ஸ் வரை அதிகரிக்கிறது. நாட்டின் மின்சார தேவை ஏழு சதவீதத்திலிந்து பத்து சதவீதம் வரை அதிகரிக்கும் என வலுசக்தி நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்தாலும் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்திருக்கும் நீரேந்து பிரதேசங்களில் மழை பெய்யவில்லை என மின்வலு அமைச்சு அறிவித்துள்ளது.

நீரேந்து பிரதேசங்களின் நீர் மட்டம் தற்சமயம் 30 சதவீதமாக காணப்படுகிறது. பண்டிகைக் காலத்தில் மின்சார தேவை அதிகரித்திருந்தாலும் நீர் மின்நிலையங்களிலிருந்து போதியளவிலான மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை முதல் மின்சார துண்டிப்பு இடைநிறுத்தப்பட்டாலும் மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்ந்தும் சவாலாகவே காணப்படுவதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.