அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிட நிழற்குடை திறப்பு விழா மற்றும் மாணவர், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (16.04.2019) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3..30மணியளவில் கிளிநொச்சி விவேகானந்தநகர் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

விவேகானந்தநகர் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு. க.ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண விவசாய, கால்நடை, நீர்ப்பாசன, மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவநேசன் (பொருளாளர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்), ஐயம்பிள்ளை ஜசோதரன் (நிர்வாக செயலாளர் -FEED), க.தவராஜா (தவிசாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை, செயற்குழு உறுப்பினர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்), வே.சிவபாலசுப்பிரமணியம் (செயற்குழு உறுப்பினர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் (அதிபர் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்), திரு. பெருமாள் கணேசன் (அதிபர் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம்), திருமதி ஜஸ்ரின் விக்னராஜ் (பிரதி அதிபர் பாரதி வித்தியாலயம்), திரு. த.குணசிங்கம் (கிராம சேவையாளர், விவேகானந்தநகர்), வெ.கனகலிங்கம்(சிவில் பாதுகாப்புக்குழு தலைவர், விவேகானந்தநகர்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்கள் க.மகேந்திரன், வே.குகதாசன்) ஆகியோரும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அயற் பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிட நிகழற்குடையினை திறந்துவைத்தார். தொடர்ந்து 2017-2018 ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரணதர, உயர்தரப் பரீட்சை என்பவற்றில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் 100பேர் புத்தகப்பைகள் மற்றும் வெற்றிக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, அயற் பாடசாலைகளின் ஆசிரியர்களும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

மேலும் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 23 பாடசாலைப் பிள்ளைகளுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் விவேகானந்தநகர் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்திற்கு மின் இணைப்பினைப் பெற்றுக் கொள்வதற்காக சங்கத் தலைவரிடம் ரூபாய் 21,000உம் வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி பேருந்து தரிப்பிட நிழற்குடை அமைப்பு, மாணவர்கள், ஆசிரியர்கள் கௌரவிப்பு, துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு மற்றும் மின் இணைப்புக்கான உதவி என இதற்கான முழுமையான நிதியையும் இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.