நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் விஷேட அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரிவித்த அவர், 500 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரையில் 375 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்த வெளிநாட்டவர்களுள் 31 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

8 இந்தியர்கள், 8 பிரித்தானியர்கள், சீனாவை சேர்ந்த இருவர், சவுதி அரேபியாவை சேர்ந்த இருவர் மற்றும் அவுஸ்திரிரேலியாவைச் சேர்ந்த இருவர் என 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 14 வெளிநாட்டவர்கள் வெடிப்பை அடுத்து காணாமல் போயுள்ள நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களில் அவர்களின் சடலங்கள் உள்ளனவா என பரிசோதிக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, அடையாளம் தெரியாத வெளிநாட்டவர்களின் சடலங்களும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்த 17 வெளிநாட்டவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.