கடந்த 21ம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னரான சோதனை நடவடிக்கைகளில், இதுவரை சந்தேகத்தின் பேரில் 76பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலையும், இரவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு பிரதேசங்களில் வைத்து 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். திரப்பனையில் 4 பேரும், இரக்குவானையில் 3 பேரும், வவுணதீவு மற்றும் மீகலாவை பிரதேசங்களில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், வத்தளை, பண்டாரகம, பலாங்கொடை, மாத்தளை மற்றும் தெல்தெனிய பகுகளில் தலா ஒருவர் வீதம் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகமயில் கைது செய்யப்பட்டவர், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றுபராவார். அவர், தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என அவரது பேஸ்புக் கணக்கின் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திரப்பனையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து, துப்பாக்கி ஒன்றும், 12 தோட்டாக்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. இதேநேரம், வத்தளையில் கைது செய்யப்பட்டவரிடமிருந்து, வோக்கி டோக்கி எனப்படும் தொடர்பாடல் சாதனங்கள் இரண்டு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மட்டக்குளி – காக்கைத்தீவு – முஹாஜீன் முகாம் என அறியப்படும் பகுதியில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில், 85 வீடுகளில் உள்ள 380 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது, அடையாளத்தை உறுதிப்படுத்தாதவர்கள் மற்றும் கைத்தொலைபேசியை வைத்திருந்தவர்களுள் சிலரிடம் இருந்த தகவல்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவர்கள் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக மட்டக்குளி காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3 கைத்தொலைபேசிகள் காவல்துறை விசேட அதிரடிப்படையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இதேவேளை, வெல்லவாய நகரில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து ஒரு தொகை சிறிய இரும்பு பந்துகளுடன் இரண்டு பேர் காவல்துறையினரால் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஒன்றைக் கிலோகிராம் நிறைகொண்ட இரும்பு பந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள், பண்டாரவளை மற்றும் போகஹகும்புர பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 44 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.