தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லொறியில் வெடி பொருட்கள் இருந்ததா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஷங்கிரி-லா ஹோட்டல்மீது தற்கொலை குண்டு தாக்கிய நபரின் பெயரிலேயே குறித்த லொறி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகள் மற்றும் 06 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து நடத்திய தேடுதலில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த கைக்குண்டுகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய அளவில வெடிக்கக் கூடியவை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்விதமிருக்க நுவரெலியா ஹாவாஎலிய, மஹிந்த மாவத்தைக்கு அருகில் அமைந்துள்ள வாவியொன்றுக்கு அருகிலிருந்து 198 டெடனேடர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.