நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், கொழும்பு ஷங்ரில்லா விருந்தகத்தில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செப்பு தொழிற்சாலையின் கணக்காய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கண்டியில், சந்தேகத்துக்குரிய கார் ஒன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், குறித்த காரானது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் அக்கரைப்பற்றுக்கு சென்றதாகவும், எனினும், அன்றைய தினம் அந்த காரை தான் செலுத்தவில்லை என்றும் அதன் சாரதி குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இன்ஷாப் அஹமட்டின் செப்பு தொழிற்சாலையின் கணக்காய்வாளர், குறித்த தினத்தில் அந்த காரை செலுத்திச் சென்றிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தினத்தில் குறித்த கார் அக்கரைப்பற்று சென்றமைக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த செப்பு தொழிற்சாலையின் முகாமையாளர் உட்பட 9 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.