கல்முனை சாய்ந்தமருது பகுதியில் தற்போது பாதுகாப்பு தரப்பினருக்கும், குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை இடம்பெற்றுள்ளது. அங்கு சுற்றிவளைப்பு சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு தரப்புக்கும், அடையாளம் தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த வீட்டில் மறைந்திருக்கும் தற்கொலை குண்டுதாரிகள் குறித்த வெடிப்புக்களை மேற்கொண்டிருக்கக்கூடும் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை சம்மாந்துறையில் வீடொன்றில் இருந்து பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலுக்கு அமைய காவற்துறை விசேட அதிரடிப்பிரிவினர், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் இணைந்து குறித்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

குறித்த வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு அடையாளம் தெரியாத சிலரால் பெறப்பட்டுள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது