கற்பிட்டி பிரதேசத்துக்குள் கடந்த சில தினங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பறக்கும்  ட்ரோன் கமரா தொடர்பான விசாரணைகளை இன்றுகாலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த ட்ரோன் கமராவானது கடந்த 3 நாள்களாக அடிக்கடி நுரைச்சோலை அனல் மின்நிலையம், கற்பிட்டி கடற்படை முகாம், வண்ணாத்திவில்லு கடற்படை முகாம்களுக்கு மேலே பறந்துள்ளதுடன், இன்று அதிகாலையும் இந்த ட்ரோன் கமரா பறந்ததாக பிரதேசவாசிகளும், கடற்படையினரும் தெரிவித்துள்ளனர். மிகவும் வேகமாக பறக்கும் இது ட்ரோன் கமரா அல்லது ஆளில்லா விமானமாக இருக்கலாம் என்றும் சில சந்தர்ப்பங்களில் குறித்த இயந்திரத்தை துப்பாக்கியால் சுட்டபோதிலும் வேகமாகப் பயணிப்பதால், இதற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் கடற்படைத் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் தற்போது ட்ரோன் கமரா, ஆளில்லாத விமானங்களைப் பறக்கவிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், கற்பிட்டி பிரதேசத்தில் பறக்கும் இந்த ட்ரோன் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, புத்தளம் பொலிஸ் நிலையதிகாரி ஜே.ஏ. ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  நாச்சிக்கள்ளி பிரதேசத்திலிருந்து அராபிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த 500 பதாதைகள் கற்பிட்டி பொலிஸாரால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே, இற்த பதாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மற்றும், கடந்த ஞாயிறன்று தெமட்டகொடையில் குண்டவெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்றும், வெளிநாட்டு நாணயத்தள்கள் சிலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சில தங்காபரணங்களும் அங்கு காணப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.