கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 03 பேருக்கு, கடந்த ஆண்டு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 2 பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

வவுணதீவு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வருடம் நவம்பர் 19ம் திகதி நள்ளிரவு கடமையில் இருந்த பொலிசார் இருவர் இனந்தெரியாதோரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலைசெய்யப்பட்டு அவர்களிடம் இருந்த இரு கைத்துப்பாக்கிகளும் எடுத்துச் செல்லப்பட்டன. குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின்போது பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல விடயங்கள் தெரியவந்துள்ளன. இந்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த 2 துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.