யாழ். தீவகம் – மண்கும்பான் பள்ளிவாசலில் இன்று காலை சிறப்பு அதிரடிப்படையினர் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடாத்திய சோதனையில் இராணுவம் பயன்படுத்தும் சில பொருள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அங்கு சோதனையிட்டபோது இராணுவம் பயன்படுத்தும் உடல் கவசம், கொமாண்டோ படைப்பிரிவினர் பயன்படுத்தும் நீர் பை டி-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 2 மற்றும் பட்டாசுகள் ஆகியன மீட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் அங்கு உள்ள ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிர்த்த ஞயிறன்று தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், மிக விரைவில் தமது 2ஆம் கட்ட தாக்குதலை நடத்தலாம் என பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேன் ஒன்றினை பயன்படுத்தி, இராணுவ சீருடையை ஒத்த சீருடையில் மறைந்திருந்து இந்த தாக்குதலை அவர்கள் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் ஊடாக அமைச்சர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பௌத்த விகாரைகளில் பெண் தற்கொலை குண்டுதாரிகளை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தும் திட்டமும் இருப்பதாக சந்தேகிக்கும் உளவுத்துறை அது தொடர்பிலும் இரகசிய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.