அம்பாறையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து, தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்காக தயார் நிலையில் இருந்த பெண்கள் அணியும் வெள்ளை நிற ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் முஸ்லிம் பெண்கள் குறித்த ஆடைகளை கொள்வனவு செய்யும் காட்சி அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாய்ந்தமருது வீட்டில் இருந்து 5 ஆடைகள் கிடைத்துள்ளதாகவும் கொள்வனவு செய்யப்பட்ட ஏனைய 4 ஆடைகளை தேடும் நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட ஆடைகளை முஸ்லிம் பெண்கள் சாதாரணமாக அணிவதில்லை. இந்த ஆடைகளை அணிந்து சிங்கள பெண்கள் போன்று சென்று தாக்குதல் மேற்கொள்வதற்காக ஆடை கொள்வனவு செய்துள்ளதாக புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த 19ஆம் திகதியன்று மீரிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைகள் வர்த்தக நிலையமொன்றில் வெள்ளை பாவாடை, சட்டைகள் பத்தை கொள்வனவு செய்ய, புர்கா அணிந்து வருகைதந்திருந்த பெண்கள் மூவரையும் மற்றும் அவர்களுடன் வருகை தந்திருந்த அவர்களது வாகன சாரதியையும் அடையாளங்கண்டு கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோருகின்றனர்.

குறித்த சந்தேகநபர்கள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசோன் போயா தினத்தில் மக்கள் நடமாடும் இடங்களில் கலந்துகொண்டு ஏதேனும் விரோத செயல்களில் ஈடுபடலாமென, பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஆகையால் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறியவருமாயின், உடனடியாக பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்து தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.