தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த லொறி ஒன்று பொலன்னறுவை, சுங்காவில பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த லொறியுடன் 3 சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். EP – PX 2399 என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கும் வேன் ஒன்றினை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மரதங்கடவொல, இகல புளியம்குளம் பகுதியில் வைத்து குறித்த வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 250-5680 என்ற இலக்கத்தை உடைய டொல்பின் ரக வேன் ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வேன் கெகிராவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த வானின் சாரதியான 46 வயதுடைய அபுசாலி நசாரும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த வானானது வாடகை அடிப்படையில் தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பால் பெற்றுக்கொள்ளப்பட்ட வானென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றும் கம்பஹா மாவட்டம் நிட்டம்புவ – வடுவேகெதர, நிசலா மாவத்தையிலிருந்து 11 துப்பாக்கி ரவைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக, நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ரவைகளில் 9 மி.மீ அளவிலான 3 ரவைகளும் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவை ரன்பொக்குணகம வீட்டுத் தொகுதிக்கருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றை கொண்டுவந்து போடப்பட்டமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும், புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள குளம் ஒன்றுக்கு அருகிலிருந்து, 27 துப்பாக்கி ரவைகளை, புத்தளம் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது மீட்டுள்ளனர். பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய, இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான பொதியொன்று குளத்தருகே இருப்பதாக, பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் குறித்த இடத்தைச் சோதனையிட்டபோது, பொதி ஒன்று சிக்கியுள்ளது.

குறித்த பொதியை சோதனையிட்ட போது, போரா 12 ரக துப்பாக்கி ரவைகள் 27 இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர். இராணுவத்தினரின் உதவியுடன், கடந்த சில தினங்களாக புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கிரிவுல்ல, கெடவத்த, தீகிரிகேவ ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 11 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 30, 34, 36 ஆகிய வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இரண்டு வாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து வெளியேறும் வடிகாலின் குழாயினுள் இருந்து இந்த வாள்கள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 37 வயதான சந்தேக நபர், இன்றைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட ஏற்பாடாகியிருந்தது