அம்பாறை சம்மாந்துறை பகுதியில் இன்றுபகல் அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கிகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகளினால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெரும் தொகையான ஆயுதங்கள் இராணுவ தேடுதலில் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி 6 ஆம் வீதி விளினையடி பகுதியில் குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்டத்தரணி ஒருவருக்கு சொந்தமான காணியில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதன்போது எம்.பி 25 ரக அமெரிக்க தயாரிப்பு மைக்ரோ கைத்துப்பாக்கி, 9எம் எம் கைத்துப்பாக்கி, பென் துப்பாக்கிகள் 2 ,சொட்கண் துப்பாக்கி ரவைள் 8, ரி56 ரக துப்பாக்கி ரவை கூடு 1, மற்றும் 170 தோட்டாக்கள், ஜெலக்னைட் குச்சிகள் 200, வயர் தொகுதி 23, அமோனியம் நைட்ரேட் உர பை 25 கிலோ கிராம் 4, இராணுவ மேலங்கி 1, வாள் 1, கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை புத்தளம் மதுரங்குளி பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தோனை நடவடிக்கையின் போது 12 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முந்தல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பல கிராமங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இராணுவத்தினருடன் இணைந்து முந்தல் பொலிஸார் சொவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை குறித்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது வீடுகள், வர்த்தக நிலையங்கள் என்பன கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை நடவடிக்கையின் போது கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் சந்தேசத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விஷேட சோதனை நடவடிக்கைகள் யாவும் 143ஆவது பலசேனாதிபதி பிரிகேடியர் தம்மிக்க திசாநாயக்கவின் ஆலோசனையில் இராணுவ வீரர்களும், முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்கவின் ஆலோசனையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல் காணொளிகளை வைத்திருந்த 5 இளைஞர்கள் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அலைபேசிகள், சஸ்ரானின் புகைப்படம், வனாத்தவில்லு பயிற்சி முகாமின் படங்கள், காணொளிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கெப்பிட்டிகொல்லாவ நகரில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கெப்பிட்டிக்கொல்லாவ பிரதேசத்தில் பணிபுரிந்து வந்துள்ள சந்தேகநபர்கள் வவுனியா, கிண்ணியா, காங்கேசன்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கண்டி மாவட்டம் அக்குறனை நகரில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாள்கள் மற்றும் சில பொருட்கள் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது கடுகஸ்தொட காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மாத்தறை மாவட்டம் வெலிகம கொக்மாதுவ வீதி கடேவத்த பாலத்தின் அருகாமையில் பொதியில் இருந்து ஆயுதங்கள் சில காவற்துறையினால் மீட்கப்பட்டுள்ளது. இன்றுகாலை பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த சில நபர்களினால் குறித்த ஆயுத தொகை வீதியில் விட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.