கிளிநொச்சி, பூநகரி, முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்சி பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் தாயார் உயிரிழந்துள்ளதுடன் 3 வயது பிள்ளை படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியல் உயிரிழந்த நபரின் காணியில் இன்றுகாலை 7 மணியளவில் யானை தென்னங்கன்றுகளை உணவாக உட்கொண்டு இருந்தவேளை, குறித்த யானையை துரத்த முற்பட்டபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் சிவநேயசன் சுகாசினி என்ற தாயார் உயிரிழந்ததுடன், அவரது 3 வயது பெண் பிள்ளையும் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த தாயார் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைகளிற்காக அழைத்து வரப்பட்டபோதே உயிரிழந்துள்ளதாகவும், சிறுமியும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கவைக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.