தற்கொலை செய்துகொள்ளப்பட்ட, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் சகோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து தற்கொலை அங்கி உட்பட பெருமளவு வெடிபொருள்கள், இன்று மாலை மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், ரிழ்வானின் மாமனார் மற்றம் மாமியார் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சகோதரரான ரிழ்வான், சாய்ந்தமருது தற்கொலை குண்டு வெடிப்பில் பலியாகிவிட்டார். ரிழ்வானின் மனைவியும் பலியாகிவிட்டார். அவர்களுடைய காத்தான்குடி வீட்டிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன. தற்கொலை அங்கி, அலைபேசிகள்-4, ஏ.ரி.எம்.அட்டைகள், வங்கி புத்தகம், மரணமடைந்த ரிழ்வான் தம்பதிகளின் நான்கு குழந்தைகளின் 4 புகைப்படங்கள், ரிழ்வானின் தேசிய அடயாள அட்டை உட்பட பல பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்தே இந்த தேடுதலை மேற்கொண்டனர் என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவத்தார். அவ்வீட்டிலிருந்த ரிழ்வானின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.