நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இரானுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இலங்கை முழூவதும் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா கோவில்குளம் பகுதியில் இன்று காலை இரானுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்திருந்தனர். அப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் சென்று அனைத்து இடங்களையும் சோதனைக்குட்படுத்தியதுடன் அடையாள அட்டை பதிவினையும் மேற்கொண்டனர். இந்நிலையில் சுற்றிவளைப்பின் போது கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஓருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இராணுவ சீருடை ஒன்றும் உயர் மின்னழுத்த வயர் றோல்கள் நான்கு, கையுறை, சப்பாத்து, டிஜிட்டல் மீற்றர் போன்றவை இருந்தமையிட்டு அவர் கைதுசெய்யபட்டுள்ளதுடன் அவர் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து அண்மையில் இலங்கை வந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. வவுனியாவில் அண்மைய நாட்களாக பல பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினரொருவரின் ஹட்டனில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒன்பது கத்திகள் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் வீட்டில் இருந்த குறித்த நபரின் சகோதரர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அவர் தற்போது யேமனில் வசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சந்தேகநபரின் ஹட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டை காவற்துறையினர் சோதனையிட்டுள்ளனர். அதன்படி, வீட்டின் களஞ்சிய அறையில் இருந்து இந்த கத்திகள் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சகோதரர் ஹட்டன் மாவட்ட நீதவான் மற்றும் நீதவான் நீதிமன்றின் நீதவான் முன்னிலையில் முற்படத்தப்பட்ட பின்னர் 20 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹட்டன் காவல்நிலையத்தில் முன்னிலையாகுமாறு சந்தேகநபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் யாழ். கொக்குவில் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது ஆவா குழுவினைச் சேர்ந்த அசோக் என்று அழைக்கப்படும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது வீட்டில் வன்முறைகளில் ஈடுபடுவதற்காக தயார் செய்து வைத்திருந்த ஆயுதம் ஒன்று வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவகளில் தொடர்பு பட்டவர் ஆவர். அவர் இதற்கு முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார். இன்று அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையிலேயே சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.