ஜா-எல – ஏக்கல இரும்பு தொழிற்சாலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட, இராணுவ கனரக ஆயுத தோட்டாக்களில், பயன்படுத்தப்படாத 409 தோட்டாக்கள் காணப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த தொழிற்சாலையின் பொது முகாமையாளர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார். நேற்று குறித்த தொழிற்சாலை நீர்க்கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவினரால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்து இராணுவத்தின் கனரக ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல், டி 56 ரக துப்பாக்கிகளுக்கான வெற்றுக் தோட்டாக்கள் 100ம் மற்றும் வெடி மருந்துகளுக்கு சமமான வெடிப் பொருட்கள் தொகையொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி தொழிற்சாலையில் பல சந்தர்ப்பங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அதன் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை காவற்துறையினர் மற்றும் இராணுவம் இணைந்து வெலிமட பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நாடு பூராகவும் இந்த தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

அதேபோல், கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரிடம் இருந்து 30 வெற்றுத் தோட்டாக்கள், இராணுவ சீருடை தொகையொன்று மற்றும் தேசிய அடையாள அட்டைகள் 06ம் காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் வெலிமட காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.