இலங்கையில் நிரந்தர இராணுதளமொன்றை அமைப்பதற்கான திட்டம் எதுவுமில்லை என அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ்  தெரிவித்துள்ளார்.

இலங்கை ஊடகங்களில் நான் இதனை தொடர்ந்தும் வாசித்து வருகின்றேன் ஆனால் நான் உங்களிற்கு உண்மையை தெரிவிக்கவேண்டும்  அமெரிக்காவிடம் அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என அமெரிக்கா கருதுவதையே அதன் பயண எச்சரிக்கை வெளிப்படுத்துகின்றது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரஜைகளை பாதுகாக்கவேண்டியது எங்களின் கடமை எனகுறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாகவே நாங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை செல்லும் சில அமெரிக்க சிறுவர்களை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பினோம். குறிப்பிட்ட காலத்திற்கு எச்சரிக்கையுடன் இருப்பதற்காக இதனை செய்தோம் என அவர்  தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரஜைகள் தங்கள் பயணங்கள் குறித்த சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான சமீபத்தைய தகவல்களை வழங்குவதற்காக நாங்கள் எச்சரிக்கையை அவ்வப்போது புதுப்பிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தற்போதைய பயண எச்சரிக்கை இலங்கைக்கு செல்வதை அமெரிக்கர்கள் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் அமெரிக்கா இலங்கைக்கு முழுமையான உதவிகளை வழங்கி வருகின்றது. இலங்கையுடன்  பாதுகாப்பு புலனாய்வு விவகாரங்களில் அமெரிக்கா ஒத்துழைக்க விரும்புகின்றது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.