புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலேரியா கால்வாய்க்கு அருகில் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புத்தளம் – மலேரியா கால்வாய்க்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான பையொன்று கிடப்பதாக, தனக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து, அங்கு சென்று குறித்த பையை சோதனை செய்த போதே, ரி 56 ரக துப்பாக்கி ஒன்று இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக, புத்தளம் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன, நேற்று தெரிவித்தார்.இதனையடுத்து, அந்த கால்வாய்க்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மற்றுமொரு ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது. குறித்த இரண்டு துப்பாக்கிகளும் தனித்தனியாக கறுப்பு நிறத்திலான பொலிதீன் உறைப் பைகளில் போடப்பட்ட நிலையில் இனந்தெரியாதோரால் மலேரியா கால்வாய்க்கு அருகில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் அவர் ௯றினார்.

அண்மையில், இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, நாடு பூராகவும் விஷேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டவிரோதமாக குறித்த துப்பாக்கிகளை வைத்திருந்த நபர்களே, சோதனைகளுக்கு அச்சமடைந்து இவ்வாறு வீசியிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் அநுர குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியா மடுகந்தை பகுதி குளத்துக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் மகசீன் மற்றும் தோட்டாக்கள் என்பவற்றை இன்று காலை, மடுகந்தை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். இன்று காலை மடுகந்தை குளத்துக்கு அருகில், பட்டம் விடுவதற்காகச் சென்ற சிறுவன் ஒருவன், இப்பொருள்களை கண்டுள்ளார்.

இதையடுத்து, விமானப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மடுகந்தை பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதும் அங்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் மகசீன் மற்றும் அதற்குரிய தோட்டாக்களை மீட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் மேலும் வெடிபொருள்களைத் தேடி தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கடற்படையினர் கொழும்பை அண்மித்த பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போது மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடமிருந்து 7 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனுடன் மேலும் ஒரு நபரிடமிருந்து இரண்டு வங்கி கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றில் கடந்த 7 மாதங்களினுள் சவுதி அரேபியாவில் இருந்து சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் வைப்பலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்றைய நபரிடமிருந்து 45 இறுவட்டுக்களும், 13 சிம்களும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வெளிபன்ன – ஹிதா மாவத்தை கல்லஸ்ஸ பிரதேசத்தில் வெடி பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. குறித்த பொதியிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வெளிபன்ன காவற்துறை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

அத்துடன் ஹெம்மாதகம நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இராணுவ ஆடைக்கு ஒத்த ஆடை தொகைகள் காவற்துறையினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மாவனல்லை மாவட்டத்த நீதவான் முன்னிலையில் பிரச்சன்னப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை அலவதுகொட பிரதேசத்தில் வீட்டு தோட்டம் ஒன்றில் இன்று பிற்பகல் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட விசாரணைகளின் போது வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், வீட்டு தோட்டத்தில் கிணறு தோன்றுவதற்காக வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிபில பகுதியில் விற்பனை நிலையம் ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி-56 ரக இரவைகள் 27 கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.