தற்கொலை குண்டுதாரிகளினால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், தேசிய தேசிய தவ்ஹீத் அமைப்புக்கு சொந்தமான பயிற்சி முகாம் ஒன்று மட்டக்களப்பு – காத்தான்குடி – ஒல்லிகுளம் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

காவற்துறை விசேட அதிரடிப்படையினர் இன்று மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின்போது குறித்த முகாம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த பயிற்சி முகாம் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். விவசாய பண்ணை போன்று அந்த முகாம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில், கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அருகில் மீட்கப்பட்ட குண்டு போன்ற குண்டுகள் அங்கு மீட்கப்பட்டுள்ளன. குறித்த பயிற்சி முகாம், தேசிய தவ்ஹீத் ஜமஹாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹசீமுக்கு சொந்தமானது எனவும், பயிற்சி நடவடிக்கைகளை தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய ரில்வான் ஹஷீமினால் நடத்தி செல்லப்பட்டதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்போது அங்கிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.