தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு பேர் அங்கும்புர, கல்ஹின்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய தேடுதலில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் அந்த அமைப்பின் பிரச்சாரங்கள் அடங்கிய 20 இருவெட்டுக்கள் மற்றும் 02 அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.இதேவேளை குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நபரொருவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பேருவளை பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 16 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து நபரொருவர் தன்னிடம் 50 வாள்களை வழங்கி, பேருவளை பிரதேசத்துக்கு மறைத்து கொண்டுச்சென்று சிலருக்கு வழங்கும்படி தெரிவித்ததாகப் பொலிஸாரிடம் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன் கொழும்பு நாரஹேன்பிட்டி- ஜாவத்த பகுதியில் வானத்தில் வட்டமடித்த ட்ரோன் கமெராவொன்று பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து காணாமல் போயுள்ளது. ட்ரோன் கமெரா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அதற்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, உடனடியாக நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கயான் பிரசன்ன மற்றும் ஏனைய பொலிஸார் சிலரும் குறித்தப் பிரதேசத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது, குறித்த ட்ரோன் கமெராவை பார்த்தாக பிரதேசவாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மற்றும், அளுத்கம – மொரகொல்ல ஓய்வு மண்டப பகுதியின் அருகாமையில் பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை அளுத்கம காவற்துறைக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவலுக்கமைய கை குண்டு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த கை குண்டு இராணுவத்தினால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.

மேலும், காத்தான்குடி பிரதேசத்தில் காவல்துறை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பல்வேறு வகையான 235 கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி டீன் ரோட் பகுதியில் வீதிக்கு அருகில் இருந்து குறித்த கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.