உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிம், கொழும்பில் தங்கியிருந்த 6 வீடுகள் தொடர்பான தகவல்களை, சஹ்ரானின் மனைவியான பாத்திமா நாதியாவினால், பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்களின் வெள்ளை நிற ஆடைகள், எதிர்வரும் நாள்களில் தேவைப்படும் என்ற நோக்கத்துடனேயே கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இருப்பினும், அவை எதற்காகக் கொள்வனவு செய்யப்பட்டன என்பது தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் இது பற்றி, கல்முனை குண்டுத் தாக்குதலில் உயிரிந்த சாரா என்ற பெண்ணுக்கே தெரிந்திருந்தது என்றும், பாத்திமா நாதியா தெரிவித்துள்ளார். இதேவேளை, குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னதான எடுக்கப்பட்ட வீடியோ ஒளிப்பதிவானது, கல்முனையில் தாங்கள் இறுதியாகத் தங்கியிருந்த வீட்டிலிருந்தே எடுக்கப்பட்டதாகவும் சஹ்ரானினால், தாங்கள் அனைவரும், கடந்த 19ஆம் திகதியன்று, வானொன்றின் மூலம் சம்மாந்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தாங்கள், நிந்தவூர் பிரதேசத்தில் தங்கியிருந்தபோது, படையினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டதால், 26ஆம் திகதியன்று, சாய்ந்தமருது வீட்டுக்குச் சென்றதாகவும், சஹ்ரானின் மனைவி, வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த வீட்டில் தான் தங்கியிருந்த போதும், அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தனக்கு எதுவும் நினைவில் இல்லை என்றும், சஹிரானின் மனைவியான பாத்திமா நாதியா தெரிவித்துள்ளார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குத் தேவையான குண்டுகளை, இணையத்தளத்தினூடான தகவல்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்பினரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் குண்டுகளைத் தயாரிப்பதற்காக, வெடிபொருட்களைப் போன்று, யூரியா, வோட்டர் ஜெல் உள்ளிட்ட இரசாயனப் பதார்த்தங்கள் பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்திற் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய குண்டுதாரியே, இந்த குண்டுகளைத் தயாரித்துள்ளார் என்றும் இந்தச் சந்தேகநபர், களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்தவர் என்றும், கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலை நடத்திய குண்டுதாரி, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் அதிவிசேட (ஏ-9) புள்ளிகளைப் பெற்றவர் என்றும் காத்தான்குடியில் அமைந்துள்ள அரபிப் பாடசாலையில் இணைந்து உயர்க்கல்வியைக் கற்கச் சென்ற காலத்திலேயே, பிரிவினைவாதச் சக்திகளுடன் இணைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.