பாதுகாப்பு படையினர் தேசிய பொறுப்பை துறந்துச் செயற்பட தயாரில்லை என தெரிவிக்கும் கடற்படையின் பேச்சாளர்  லுதினர் கமான்டர் இசுறு சூரிய பண்டார, சிலாவத்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற  தயாரில்லை எனவும் தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு இது தொடர்பில்  மேலும் தெரிவித்த அவர்,   உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்புத் தரப்பின் சோதனை செயற்பாடுகளுக்கு கடற்படை முழுமையான ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.மேலும், கடற்கரைகளை பாதுகாப்பதற்கு உபாய மார்க்க திட்டங்கள் நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாகவும்,  24 மணித்தியாலங்களும் கரையோர பாதுகாப்புக் குறித்து கழுகு பார்வை செலுத்தப்படுகிறது என்றார்.

கச்சதீவு விஹாரையை நிர்மாணித்தவர்களே, கொச்சிக்கடை தேவாலயப் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தேவாலயத்தின் புனித அந்தோனியார் திருவிழாவுக்கு முன்னதாக, முழுமையாக தேவாலயத்தை புனரமைத்துக்கொடுக்க ​எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், வோடர் ஜெல் என்ற பெயரில்  பயன்படுத்தபட்டு வெடிபொருள்கள்  அனுமதி பெற்றவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக தெரிவித்த அவர்,  கடந்த நாள்களில் இந்த  வெடிபொருள்கள்  வேறுபட்ட சில காரணங்களுக்காக பயற்படுத்தட்டுள்ளதாக அறிந்ததையடுத்து, முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, 100 கிலோவுக்கும் அதிகமான வோடர் ஜெல் வகை வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார்.

நாட்டில் தற்போது யுத்தம் இல்லை என்ற காரணத்துக்காக, கடற்படை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புகள், தேசிய பொறுப்பைத் துறந்துச் செயற்பட முடியாதெனவும், கடற்படை முகாம்களை அகற்றிவிட்டால் அப்பகுதிகளில் இடம்பெறும்  போதைப்பொருள், தங்கம் கடத்தும் செயற்பாடுகள் ஆகியவற்றை முறிடியப்பது யார் என்றும் வினவினார்.

பாதுகாப்புப் பிரிவின், முகாம்கள் கொள்கை ரீதியில் எடுக்கப்டும் தீர்மானங்களுக்குமையவே நிறுவப்படுவதாகவும், இதனால்  சிலாவத்துறை பகுதியில் உள்ள கடற்படை முகாமை அகற்றிக்கொள்வதற்கு கடற்படையினர் ஒருபோதும் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.