தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகரான, மொஹமட் இன்சாக் அஹமட்டின் வெல்லப்பிட்டிய தொழிற்சாலையில் வைத்து கைதுசெய்யப்பட்ட, கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் ஆர். எம்.பி. நெலும்தெனிய இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளார்.

கருப்பையா கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா இந்த வெடிப்புச் சம்பவத்தின் 10ஆவது சந்தேகநபரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் 14, 15ஆம் திகதிகளில் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு, சிறைச்சாலைகள் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை விசாரித்து வாக்குமூலம் பெற வேண்டும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்ததை கவனத்தில் எடுத்த, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை மத்தேகொட இராணுவ முகாம் மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலை ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக அலைபேசி ஊடாக அறிவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், மத்தேகொட இராணுவ முகாமில்  பொறியியல் பிரிவில் கடமையாற்றும்  இராணுவ வீரரென்றும் மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என்றும், மேலதிக விசாரணைகளுக்காக, இவர்  இராணுவத் தலைமையக சட்டப்பிரிவிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.