கொச்சிக்கடை, சென். அந்தோனி தேவாலயத்திற்கு தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள வந்த நபர் கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட நபரிற்கு சொந்தமான வேன் ஒன்றிலேயே வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வேன் கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட மொஹம் அசாம் மொஹமட் முபாரக்கின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வேன் வெடிபொருள் பொருத்தப்பட்ட நிலையில் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. WP-PJ 4080 என்ற குறித்த வேனில் பொருத்தப்பட்டிருந்த வெடிபொருளை கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்து செயலிழக்க செய்திருநந்தனர். குறித்த வேன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது அது கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட நபருடையது என்றும், குறித்த வேனை வாங்குவதற்கு மற்றும் அதன் இருக்கைகளை பொருத்துவதற்கு மற்றுமொரு நபர் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த நபர் சாட்சியாளர்கள் நால்வரை சந்தித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சாட்சியாளர்களின் கருத்தின் பிரகாரம் குறித்த நபர் 35 – 40 வயதிற்குட்பட்ட ஒல்லியான உடம்புடைய, உயரம் 5 அடி 6 அங்குலமான, முகத்தில் தாடி வைக்க ஒருவர் என தெரியவந்துள்ளது. சாட்சியாளர்களின் கருத்தின் பிரகாரம் குறித்த நபரின் 4 படங்கள் வரையப்பட்டுள்ளதுடன் அவற்றை கீழே காணலாம். குறித்த நபர் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் அறிந்திருப்பின் 0112422176 அல்லது 0112392900 என்ற இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு பொலிஸார் வேண்டியுள்ளனர்.