நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பிரிவு, வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் குளியாப்பிட்டிய, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தபட்ட பொலிஸ் ஊரடங்கு, பின்னர் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையையடுத்து வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் என ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு நேற்று இரவு 9 மணியிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்தனர்.அதன்படி அசாதாரண சூழந்நிலையினை கருத்திற்கொண்டு நேற்றிரவு 9.00 மணிமுதல் இன்று  அதிகாலை 4.00 மணிவரை வடமேல் மாகாணம், கம்பஹா மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் வடமேல் மாகாணத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரையும், அதேபோல் கம்பஹா மாவட்டத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம்  இன்று காலை 6.00 மணிவரையும் அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.