வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குசேகர கூறியுள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை மையப்டுத்தி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரதன்வின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அந்த பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன் பயங்கரவாதிகள் பயன்படுத்திய 17 பாதுகாப்பு இல்லங்களும் 7 பயிற்சி முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.