சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

கடந்த 13ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீனா நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதேநேரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது. இலங்கையில் இடம்பெற்ற எதிர்பாராத பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை தெரிவித்த சீன பிரதமர், இலங்கை சீன ஜனாதிபதிகளுக்கிடையிலான கலந்துரையாடலின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக தாம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பயங்கரவாத சவால்களை வெற்றிகொள்வதற்கு சீன அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக பாதுகாப்புத் துறையினரின் செயற்பாடுகளுக்காக 260 கோடி ரூபா நிதி அன்பளிப்பினை வழங்குதல் மற்றும் காவல்துறை திணைக்களத்திற்கு தேவையான வசதிகளை வழங்குதல் முதலான செயற்பாடுகளுக்காக சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.